search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம்"

    உலகப் புகழ் வாய்ந்த பூரி ஜெகந்நாதர் ஆலய தேரோட்டம் இன்று தொடங்கியது. 9 நாட்கள் நடைபெறும் இந்த தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    புவனேஸ்வர்:

    உலக அளவில் புகழ் பெற்ற 12-ம் நூற்றாண்டை சேர்ந்த ஜெகநாதர் கோவில், ஒரிசா மாநிலம் பூரி நகரில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஒன்பதுநாள் தேரோட்ட திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தேரோட்ட திருவிழா இன்று பிற்பகல் தொடங்கியது. இந்த விழாவில், உலகம் முழுவதும் இருந்து பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தேராட்ட திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகந்நாதர் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தார். மேலும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய மற்றொரு தேரில் அவருடைய சகோதரர் பாலபத்ரர் அலங்கரிக்கப்பட்டிருந்தார். 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கருப்பு நிறத்தேரில் சுபத்ரா தேவி அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

    கோவிலில் உள்ள சிங்கவாசல் அருகே மூன்று தேர்களும் தயார் நிலையில் இருந்தன. முன்னதாக, ஜெகநாதர், பாலபத்ரர், சுபத்ரா தேவி ஆகிய கடவுளர்களின் சிலைகளை கோவில் ஊழியர்கள் தோளில் சுமந்து வந்து தேர்களில் வைத்தனர். அப்போது, சங்கொலி முழங்க பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். இவ்விழாவில் ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    பிற்பகல் 3 மணி அளவில் தேரோட்ட விழா தொடங்குகிறது. முதலில் பாலபத்ரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி உள்ளிட்ட மற்ற சிறு தேர்களும் புறப்பட்டன. கடைசியாக ஜெகநாதர் தேர் புறப்பட்டு செல்லும்.



    தேர் திருவிழாவையொட்டி ஊர்வலப் பாதையிலும் பூரி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. போலீசாருடன் மத்திய ஆயுதப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குண்டிச்சா கோவில் நோக்கி செல்லும் இந்த தேரோட்டத்தின் ஒரு அங்கமாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகநாதர் ஓய்வு எடுப்பது வழக்கம். அதன் பிறகு, தேரோட்டம் தொடங்கி வருகிற 22-ந்தேதி அன்று நிறைவடையும்

    முன்னதாக, பூரி ஜெகந்நாதர் ஆலய தேரோட்டத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    ஜகநாதர் அருளால் நாடு பெரிய அளவிலான வளர்ச்சியை அடைய வேண்டும். இந்தியர்கள் அனைவரும் ஜகநாதரின் அருளால் சுபிட்சத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என தனது வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

    இதேபோல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோரும் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
    ×